Tuesday, August 31, 2010

korinthiyar

அதிகாரம் 10
1 சகோதரர்களே, உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்; நம் முன்னோர் அனைவரும் மேகத்தின் கீழ் நடந்தனர்; அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.
2 மோயீசனோடு உறவு விளைத்த ஞானஸ்நானம் ஒன்றை அவர்கள் அனைவரும் இவ்வாறு அம்மேகத்திலும் கடலிலும் பெற்றனர்.
3 இயற்கைக்கு மேற்பட்ட அதே உணவை அனைவரும் உண்டனர்.
4 இயற்கைக்கு மேற்பட்ட அதே பானத்தை அனைவரும் பருகினர். 'தங்களைப் பின் தொடர்ந்த பாறையிலிருந்து பானம் பருகி வந்தனர். அப்பாறையோ இயற்கைக்கு மேற்பட்டது; அது கிறிஸ்துவே என்க.
5 ஆயினும் அவர்களுள் பெரும்பாலோர் மேல் கடவுள் பிரியம் கொள்ளவில்லை ; அவர்கள் பிணங்கள் பாலை நிலமெங்கும் சிதறிக்கிடந்தன.
6 அவர்கள் தீயன இச்சித்ததுபோல் நாமும் இச்சிக்கலாகாது எனக் காட்டவே இவை நமக்கு முன் அடையாளமாய் நிகழ்ந்தன.
7 ள்அவர்களுள் சிலர் சிலைவழிபாட்டினர் ஆனது போல நீங்களும் ஆகாதீர்கள். அவர்களைக் குறித்துத்தான், ' மக்கள் உண்ணவும் குடிக்கவும் அமர்ந்தார்க; களியாட்டம் நடத்த எழுந்தார்கள் ' என்று எழுதியிருக்கிறது.
8 அவர்களுள் சிலர் வேசித்தனத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் இருபத்துமூவாயிரம் பேர் மடிந்தனர்; அவர்களைப் போல் நாமும் வேசித்தனத்தில் ஈடுபடலாகாது.
9 அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்துப் பாம்புகளால் அழிந்துபோயினர்; அவர்களைப்போல் நாமும் ஆண்டவரைச் சோதிக்கலாகாது.
10 அவர்களுள் சிலர் முணுமுணுத்து அழிவு விளைவிக்கும் தேவதூதனால் மாண்டனர்; அவர்களைப் போல் நீங்களும் முணுமுணுக்காதீர்கள்.
11 அவர்களுக்கு நிகழ்ந்த இவையெல்லாம் ஒரு முன்னடையாளம். இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு அறிவு புகட்டும் படிப்பினையாக இவை எழுதப்பட்டன.
12 ஆகையால், நிலையாய் நிற்பதாக நினைக்கிறவனுக்கு எச்சரிக்கை, அவன் நிலைகுலைந்து போகலாம்.
13 மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.
14 ஆகையால், என் அன்புக்குரியவர்களே, சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்.
15 உங்களை விவேகிகள் என்று மதித்துப் பேசுகிறேன்; நான் சொல்லப்போவதைக் குறித்து நீங்களே ஆய்ந்து முடிவு செய்யுங்கள்.
16 திருக்கிண்ணத்தை ஏந்தி நாம் இறைபுகழ் கூறுகிறோமே; அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அன்றோ? நாம் அப்பத்தைப் பிட்கிறோமே; அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அன்றோ?
17 அப்பம் ஒன்றே; ஆதலால், நாம் பலராயினும் ஒரே உடலாய் உள்ளோம்; ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குபெறுகிறோம்.
18 பழைய இஸ்ராயேல் மக்களைப் பாருங்கள்; பலிப்பொருளை உண்பவர்கள் பலிப்பீடத்தோடு உறவுக்கொள்கிறார்கள் அல்லரோ
19 இப்படி நான் சொல்லும்போது, சிலைகளுக்குப் படைத்ததையோ, சிலையையோ பொருட்படுத்த வேண்டுமென்பதா என் கருத்து? இல்லை.
20 சிலைகளுக்குப் படைப்பவர்கள் பலியிடுவது கடவுளுக்கு அன்று, பேய்களுக்கே என்பது தான் கருத்து. நீங்கள் இவ்வாறு பேய்களோடு உறவு கொண்டவர்களாவதை நான் விரும்பேன்.
21 நீங்கள் ஆண்டவரின் கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் பருக இயலாது. ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்குபெற இயலாது.
22 ஆண்டவருக்குச் சினமூட்ட நினைப்பதா? அவரைவிட நாம் ஆற்றல் மிக்கவர்களோ?
23 ' எதையும் செய்ய உரிமையுண்டு' என்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயன் தராது. எதையும் செய்ய உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எல்லாமே ஞானவளர்ச்சி தராது.
24 யாரும் தன்னலத்தை நாடலாகாது; அனைவரும் பிறர் நலத்தையே நாடவேண்டும்.
25 கடையில் விற்கிற இறைச்சி எதையும் வாங்கி உண்ணலாம்; கேள்வி கேட்டு, மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
26 ஏனெனில், ' மண்ணுலகும் அதிலுள்ளதனைத்தும் ஆண்டவருடையதே'.
27 புறச் சமயத்தான் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, நீங்கள் அதற்குப் போக விரும்பினால், பரிமாறுவது எதுவாயினும் உண்ணுங்கள்; கேள்வி கேட்டு மனச்சாட்சியைக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
28 ஆனால் யாராவது, ' இது படையல்' என்று உங்களுக்குச் சொன்னால், அவ்வாறு குறிப்பிட்டவனை முன்னிட்டும் மனச்சாட்சியின் பொருட்டும் அதை உண்ணாதீர்கள்.
29 நான் குறிப்பிடுவது உங்கள் மனச்சாட்சியன்று, மற்றவனுடைய மனச்சாட்சியே. ' என் செயலுரிமை மற்றவனுடைய மனச்சாட்சிக்கு ஏன் கட்டுப்படவேண்டும்?
30 நான் நன்றிக்கூறி எதையேனும் உண்டால், அவ்வாறு நன்றிகூறி உண்கிற உணவைப்பற்றி நான் பழிச்சொல்லுக்கு ஆளாவானேன் ' என்று ஒருவன் கேட்கலாம்.
31 நான் சொல்வது: நீங்கள் உண்டாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாம் கடவுளின் மகிமைக்கெனச் செய்யுங்கள்.
32 யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடைஞ்சலாய் இராதீர்கள்.
33 நானும் அவ்வாறே அனைத்திலும் அனைவருக்கும் உகந்தவனாய் இருக்க முயலுகிறேன். எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.
அதிகாரம் 11
1 நான் கிறிஸ்துவைப்போல் நடக்கிறவாறே நீங்களும் என்னைப்போல் நடந்துகொள்ளுங்கள்.
2 எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களிடம் கையளித்ததையெல்லாம் கையளித்தவாறே நீங்கள் கடைபிடித்து வருவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
3 ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆணுக்குக் தலையாய் இருப்பவர் கிறிஸ்து பெண்ணுக்குத் தலையாய் இருப்பவன் ஆண், கிறிஸ்துவுக்குத் தலையாய் இருப்பவர் கடவுள்.
4 செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தன் தலையை மூடிக்கொள்ளும் ஆண் எவனும் தன் தலையை இழிவுபடுத்துகிறான்.
5 ஆனால் செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தலைக்கு முக்காடிடாத பெண் எவளும் தன் தலையை இழிவுபடுத்துகிறாள். அது அவள் தலையை மழித்துவிட்டதுபோலாகும்.
6 பெண்கள் முக்காடிடவில்லையானால், கூந்தலை வெட்டிவிடட்டும். கூந்தலை வெட்டிவிடுவதோ, மழித்துவிடுவதோ பெண்ணுக்கு இழிவு என்றால் தலைக்கு முக்காடிட்டுக்கொள்ளட்டும்.
7 ஆண்மகன் தலையை மூடிக்கொள்ளலாகாது. ஏனெனில், அவன் கடவுளின் சாயலும், அவரது மாட்சியின் எதிரொளியும் ஆவான்.
8 பெண்ணோ ஆணின் மாட்சிக்கு எதிரொளி. ஏனெனில், பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை; ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்.
9 மேலும் பெண்ணுக்காக ஆண் உண்டாக்கப்படவில்லை; ஆணுக்காகத்தான் பெண் உண்டாக்கப்பட்டவள்.
10 ஆகையால் வானதூதர்களை முன்னிட்டு, பெண் தன் தலையின் மேல் பெண்மைக்குரிய பெருமையின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்,.
11 ஆயினும் கிறிஸ்துவ ஒழுங்கு முறையில் பெண் இனம் இன்றி, ஆண் இனம் இல்லை. ஆண் இனம் இன்றிப் பெண் இனம் இல்லை.
12 ஏனெனில், ஆணிடமிருந்து பெண் தோன்றியவாறே பெண்ணின் வழியாய் ஆணும் தோன்றுகிறான்; ஆனால் யாவும் கடவுளிடமிருந்து தான் வருகின்றன.
13 முக்காடின்றிக் கடவுளை நோக்கிச் செபித்தல் பெண்ணுக்கு அழகா? நீங்களே சொல்லுங்கள்.
14 ஆண் நீண்ட முடி வளர்ப்பது அவனுக்கு இழிவு என்றும், பெண் கூந்தலை வளர்ப்பது அவளுக்குப் பெருமை என்றும் இயற்கையே உங்களுக்குக் கற்பிக்க வில்லையா?
15 ஏனெனில் கூந்தல் அவளுக்குப் போர்வைப்போல் அமைந்துள்ளது.
16 இதைப்பற்றி வாக்குவாதம் செய்ய நினைப்பவனுக்கு நான் சொல்வது: அத்தகைய வழக்கம் எங்கள் நடுவிலும் இல்லை; கடவுளின் எந்தச் சபையிலும் இல்லை.
17 இந்த அறிவுரைகளை நான் கூறும்போது வேறொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்; அது உங்களுக்குப் பெருமை தராது. நீங்கள் ஒன்று கூடும்போது உங்களுக்கு நன்மையை விடத் தீமையே விளைகிறது.
18 முதலாவதாக, நீங்கள் சபையில் கூடும்போது உங்கள் நடுவில் பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அந்தச் செய்தியை நம்புகிறேன்.
19 உங்கள் நடுவில் பிரிவினைகள் உண்டாகத் தான் செய்யும். அதனால் உங்களுள் தகுதியுடையோர் யாரனெத் தெரியவரும்-.
20 இனி, நீங்கள் ஒன்றாகக் கூடி உண்பது ஆண்டவரின் விருந்தன்று, உங்கள் சொந்த விருந்தே.
21 ஏனெனில், நீங்கள் உண்ணும்போது, ஒவ்வொருவனும் உண்பதற்கு முந்திக்கொள்வதால் ஒருவன் பசியாய் இருக்கிறான். வேறொருவன் குடிவெறி கொள்கிறான்.
22 உண்டு குடிக்க உங்களுக்கு வீடு இல்லையா? அல்லது இல்லாதவர்களை நாணச்செய்து கடவுளின் சபையை இழிவுபடுத்துகிறீர்களா? என்ன சொல்வது உங்களைப் புகழ்வதா? இதில் உங்களை எப்படிப் புகழ்வது?
23 ஏனெனில், நான் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டது இதுவே - அதையே நான் உங்களுக்குக் கையளித்தேன் அதாவது, ஆண்டவராகிய இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, நன்றி கூறி அதைப் பிட்டு:
24 ' இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.
25 அவ்வாறே உணவு அருந்திய பின் கிண்ணத்தையும் எடுத்து ' இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை. இதைப் பருகும் போதெல்லாம் என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
26 எனவே, நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவர் வரும் வரையில் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறீர்கள்.
27 ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறாள்.
28 ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
29 ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்.
30 ஆதலால்தான் உங்களிடையே நலிந்தவரும் நோயுற்றவரும் பலர் உள்ளனர்; மற்றும் பலர் இறந்து போகின்றனர்.
31 நம்மை நாமே தீர்ப்புக்குட்படுத்திக் கொண்டால், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்.
32 அப்படியே ஆண்டவரின் தீர்ப்புக்குள்ளானாலும், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்பதே கருத்து. இவ்வுலகத்தோடு நாமும் அழிவுத்தீர்ப்பை அடையாதிருக்கவே அவ்வாறு செய்கிறார்.
33 எனவே, என் சகோதரர்களே, உண்பதற்கு நீங்கள் ஒன்று கூடும்போது, ஒருவர் ஒருவருக்காகத் காத்திருங்கள்.
34 பசிக்கு உண்பதானால் வீட்டிலேயே உண்ணுங்கள்; அப்போது, நீங்கள் கூடிவருவது தண்டனைத் தீர்ப்புக்கு உரியதாய் இராது. மற்றதெல்லாம் நான் வரும்போது ஒழுங்குபடுத்துகிறேன்.

No comments:

Post a Comment