Saturday, July 17, 2010

1 கொரிந்தியர் அதிகாரம் 12 -14

அதிகாரம் 12
1 அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
2 நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே.
3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும்,
10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
11 இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம். ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது. இந்தப் பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது.
15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
16 காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?
17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?
18 தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
19 அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
20 அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.
21 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும், தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.
22 சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.
23 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம். நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்.
24 நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
25 சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
26 ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களுமாயிருக்கிறீர்கள்.
28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்.
29 எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?
30 எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
31 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள். இன்னும் அதிக மேன்மையான வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.
அதிகாரம் 13 
1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஐனம் ஒன்றுமில்லை.
4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.
10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.
12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. இவைகளில் அன்பே பெரியது.
அதிகாரம் 14 
1 அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷுசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்.
2 ஏனெனில் அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
4 அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
5 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
6 மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஐனம் என்ன?
7 அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?
8 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
11 ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்.
13 அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
14 என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி என் கருத்து பயனற்றதாயிருக்கும்.
15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன். நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.
17 நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.
18 உங்களிலெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள். துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
21 மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஐனங்களிடத்தில் பேசுவேன். ஆகிலும் அவர்கள் எனக்கு செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிதே.
22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
24 எல்லாரும், தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.
25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும். அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
26 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர் மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவேண்டும்.
28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
29 தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.
30 அங்கே உட்கார்ந்திருக்கிற மெற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
31 எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.
32 தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே.
33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார், பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
34 சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.
35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள். ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
36 தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது?
37 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
38 ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும்.
39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.
40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.

No comments:

Post a Comment